ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்!

Friday, March 25th, 2016

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தாக்குதல் இலக்குகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த அமைப்பு இந்த ஆண்டு வெளிநாடுகளில் தாக்குதல் நடத்தும் பட்டியலில் இலங்கையின் வரைபடமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பாதுகாப்பு மற்றும் போர் தொடர்பில் ஆய்வு நடத்தும் அமெரிக்க நிறுவனமொன்று வெளியிட்ட புதிய வரைபடத்தில் இலங்கைக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது போன்ற ஓர் ஆவணம் வெளியிடப்பட்ட போது இலங்கையின் வரைபடம் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இந்த ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் வகுத்துள்ள நாடுகள் மற்றும் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டுள்ள நாடுகளையும் உள்ளடக்கியே புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சிரியா, ஈராக், ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சீனா, ரஸ்யா, அமெரிக்கா, இந்தியா, இலங்கை, சூடான், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு முப்படையினரைக் கொண்டு பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுத் தகவல்களை திரட்டி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையம், கொழும்பு துறைமுகம், உலக வர்த்தக நிலையம், பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: