ஐ.எம்.எப் உடன்படிக்கை தொடர்பில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் சீனா உறுதி – சீனாவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை இலங்கை அரசாங்கம் மிகவும் மதிக்கின்றது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022

சர்வதேச நாணய நிதியத்தில் தமது நாடும் அங்கம் வகிப்பதாக தெரிவித்துள்ள சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து சீனத் தூதுவர் திருப்தி வெளியிட்டுள்ள நிலையில், இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை இலங்கை அரசாங்கம் மிகவும் மதிக்கின்றது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷெங்ஹொங் மற்றும் சிறிலங்காபிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கைக்கு மேலதிகமாக 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாகத் தெரிவித்த தூதுவர், உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்க சீனா வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஐநா மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச மன்றங்களில் இலங்கையின் இறையாண்மைக்கு ஆதரவான சீன நிலைப்பாடு குறித்தும் பிரதமர் விசேடமாக குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகள் குறித்து திருப்திகரமான குறிப்புடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

நேரடி தனியார் முதலீடுகளுடன் பொருளாதார பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்காக விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் முதலீடுகளை இலங்கை வரவேற்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: