ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்களின் பயணம நிறைவு!

Saturday, May 7th, 2016

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்களான மொனிகா பின்டோ மற்றும் ஜோன் ஈ மெண்டிஸ் ஆகியோர் இன்று தமது பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

இதன்நிமித்தம் இன்றையதினம் அவர்களின் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் குறித்த இரண்டு விசேட அறிக்கையாளர்களும் கடந்த 29ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் அரசாங்க அதிகாரிகள், சட்டத்துறை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமுக உறுப்பினர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் சந்தித்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் அவர்கள் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது அவதானிக்கப்பட்ட விடயங்களை இன்றையதினம் அவர்கள் ஊடக சந்திப்பில் வைத்து வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இந்த விஜயம் குறித்து இரண்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜுன் ஆகிய மாதங்களில் நடைபெறும் இரண்டு மனித உரிமைகள் மாநாடுகளில் முன்வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: