ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசால் இலங்கைக்கு உதவி!

Wednesday, October 11th, 2023

அவசர பதிலளிப்பு வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10.10.2023) நடைபெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்றத்தின் உப அமைச்சர் கொமுரா மசாஹிரோ, பொருளாதார நெருக்கடிகளின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

நீண்டகால நட்பு நாடு என்ற வகையில் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஜப்பான் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

அதற்கமைய நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாகவும், பாடசாலை உணவு வழங்கல் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்ற வகையில் விசேட வேலைத்திட்டங்களாக முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

70 வருடங்களுக்கு முன்பாக இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது. முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிவரும் 10 மில்லியன் பெறுமதியான உணவு பொருட்கள் அன்பளிப்பு இம்முறையும் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசின் உதவியுடன், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை மட்டுப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் சமரதுங்க சுட்டிக்காட்டினார்.

இதுவரையில் ஜப்பான் அரசால் இலங்கை மக்களுக்காக 7 ஆயிரத்து 270 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும், அதன் கீழ் பாடசாலைகளுக்காகச் சிவப்பு பருப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும், பாடசாலை மாணவர்கள் அதனால் பயனடைவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: