ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் – ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு!

Wednesday, March 10th, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே இன்றையதினம் குறித்த விவாதம் இடம்பெற்றது.

இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமான  குறித்த விவாதம் தொடர்பில் மாலை 5.30 மணிவரை ஆளும் தரப்பிரருக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையே பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன

இதனிடையே ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட்ட சந்தேகநபர்கள் ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

அபு ஹின்த், லுக்மன் தாலிப், அபு அப்துல்லா, ரிம்சான், சாரா ஜஸ்மின் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதிக்கு முன்னரும் அதற்கு பின்னரும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பாரியளவான வாள்கள் மற்றும் அதனை ஒத்த ஆயுதங்களை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவருமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் மேல் நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து சட்ட மா அதிபரால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பாரியளவில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்ட மற்றும் களஞ்சியப்படுத்தப்பட்ட இடங்களையும் அவை விநியோகிக்கப்பட்ட இடங்களையும் கண்டறியுமாறும் சட்டமா அதிபரால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குழுவினர், ஆயுத கொள்வனவுடன் தொடர்புடைய நபர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: