எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிசார் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் – யாழ் மாவட்ட செயலர் மகேசன் கோரிக்கை!

Wednesday, August 3rd, 2022

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிசார் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என மாவட்ட செயலர் மகேசன், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேவிடம் கோரிக்கை விடுததுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குமுறையில் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் தலைமையில இடம்பெற்றது. இதன்போதே மாவட்ட செயலளரால் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே, இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வன், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன வடபிராந்திய முகாமையாளர் சிவரதன் உட்பட பிரதேச செயலர்கள், கூட்டுறவுச்சங்க தலைவர்கள், எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர்கள் முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட செயலாளர் மகேசன் – எரிபொருள் வரிசையில் இடம் பிடித்து வைத்தல், வரிசையில் மூன்று நாட்களுக்கு முன்னமே காத்திருந்து வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும். முதல் நாளே எரிபொருள் வரிசையில் நிற்பவர்களை அப்புறப்படுத்த பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

மேலும் தெரிவிக்கையில் – பொதுமக்களுக்கு என ஒரு வரிசை பெண்களுக்கு என ஒரு வரிசை உத்தியோகத்தர்களுக்கு என ஒரு வரிசை என ஒழுங்கு முறையை ஏற்படுத்தி செயற்பட வலியுறுத்தி இருக்கின்றோம். அதனை நடைமுறைப்படுத்துவது எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவத்தின் கடமையாகும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நேரங்களின் போது பல துஷ்பிரயோகங்கள் இடம் பெறுவதாக அறிக்கையிடப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக இரவு நேரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதும் பலதரப்பட்ட காரணங்களின் நிமித்தம் பிரதேச செயலகத்தினரும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களும் பொலிசாரும் இணைந்து நிலைமைக்கேற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூடுவது பற்றி தீர்மானிக்க முடியும்.

மாலை 5 மணிக்கு பின்னர் எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் அதனை மறுநாள் விநியோகிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதற்கான முடிவும் பிரதேச செயலக மட்டத்தில் சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

சட்டவிரோத செயல்களை தவிர்த்து அனைவருக்கும் எரிபொருள் கிடைக்க செயற்படவேண்டும். அதிகளவு மோட்டார் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உள்ளே இருப்பதால் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுகின்றது. அதனால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களின் மோட்டார் வண்டிகளைத் தவிர தரித்து நிற்கும் ஏனைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: