சீனி விலையை கட்டுப்படுத்த விரையில் தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021

சீனி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் சீனியை 105 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

முறையற்ற விதத்தில் அதிக இலாபத்தை பெறும் நோக்கில் சீனி விலையை விற்பனையாளர்கள் 210 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை சீனிக்கான நிர்ணய விலை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்துள்ளார்..

இந்நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஸ்ரீலங்கா ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கியுள்ளதால், பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் போக்கு உள்ளதாகவும் முடக்கல் நிலை காரணமாக நூல் அறுந்த பட்டத்தைப் போன்று பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில், மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

இதனிடையே

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நலன் கருதி அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மொத்த விற்பனைக்காக மாத்திரம் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தை என்பன குறித்த தினங்களில் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர்களுடன் தொடர்புகொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமென சஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: