எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை – துறைசார் அமைச்சர் ரஷ்யா மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம்!

Monday, June 27th, 2022

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டார் மன்னர் சேக் தமீம் பின் ஹமாட் அல் தானி அண்மையில் இலங்கைப் பிரதிநிதிகளை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியிருந்தார்.

இதேவேளை கட்டாரில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இன்றையதினம் அமைச்சர் காஞ்சன உள்ளிட்டவர்கள் கட்டாருக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 2 அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 9,000 மெற்றிக் டன் டீசலும், 6,000 மெற்றிக் டன் பெற்றோலும் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

இந்தநிலையில், நாளைய தினம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து 10,000 மெற்றிக் டன் டீசலை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடன் திட்டத்தின் அடிப்படையின் கீழ், எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை நாளை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: