எம்.டி.நியூ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது !

Saturday, September 5th, 2020

இலங்கைக்கு கிழக்கே 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி.நியூ டயமன் என்ற பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, இந்திய கடற்படை, இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியன இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த, எம்.டி.நியூ டயமண்ட் கப்பலின் பிரதான இயந்திர அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து அதில் தீ பரவியிருந்தது.

இவ்வாறு  தீ விபத்துக்கு உள்ளான கப்பல் தொடர்பிலான மீட்பு பணிகளுக்கு இந்திய மற்றும் ரஸ்ய கடற்படையினர் உதவிக்கரம் நீட்டியிருந்தனர்.

குவைத்திலிருந்து கச்சா எண்ணெயை எடுத்துக் கொண்டு இந்தியா செல்லும் வழியிலேயே குறித்த கப்பல் விபத்தில் சிக்கியது. குறித்த கப்பல் விபத்துக்கு உள்ளான உடனே தீ மற்றும் சேதம் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், இலங்கையில் கிழக்கு கடற்கரையில் தீப்பிடித்த கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இலங்கை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன் எம்.டி.நியூ டயமண்ட் கச்சா எண்ணெய் டேங்கரில் இருந்த அனைவரும் இப்போது மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கப்பலின் தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, இந்திய கடற்படை, இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியன தொடர்ந்து ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: