எந்தவொருவரது பதவி விலகல் கடிதமும் கிடைக்கவில்லை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, January 27th, 2023

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரின் எழுத்துபூர்வ பதவி விலகல் அல்லது அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை இதுவரை தாம் பெறவில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதாகவும், ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரின் பதவி விலகல் கடிதம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் மீதுள்ள மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நோக்கில் அவ்வப்போது இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுவதை அவதானித்துள்ளதாக தெரிவிக்கும் ஆணைக்குழு ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரித்துள்ளது.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திட்டமிட்டு வருவதாகவும், எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் எவ்வித தாமதமும் இன்றி திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் எனவும் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

இதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம் . சார்ள்ஸ், தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் புதன்கிழமை கையளித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பதிவொன்றில், ஆணைக்குழுவின் செயல்பாடுகளுக்கு மூன்று உறுப்பினர்கள் போதுமானவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் சரத்துகளை மேற்கோள்காட்டி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது என்றார்.

அத்துடன், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்த போதிலும், ஆணைக்குழுவிற்கு செயற்பட அரசியலமைப்பின் படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: