எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, April 6th, 2023

நஷ்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நஷ்டம் அடைவதாகவும் அமைச்சர் கூறினார்.

நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் 1029 மில்லியன் ரூபா எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு வரியாக 28 மில்லியன் ரூபாவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பல தொடர்புடைய வர்த்தகங்களில் சந்தை ஏகபோக உரிமை அரசாங்கத்திற்கு இருந்தாலும், இந்த நிறுவனங்கள் நஷ்டமடைந்து வருவதாக அமைச்சர் கூறினார்.

இந்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணமே இந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்கப்படுகிறது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, அரசாங்கம் மக்களுக்கு சுமையை ஏற்றி நிறுவனங்களை நடத்தாது, ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகவே செயற்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: