எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் முடிவு!

Friday, December 2nd, 2016

எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் ஒபெக் அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறை எண்ணெய் விநியோகத்தை மட்டுப்படுத்த இணங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி தொடக்கம் நாளொன்றுக்கு 1.2 மில்லியன் பீப்பாய்கள் குறைக்கப்படும் என்று ஒபெக்கின் தலைவர் முஹமது பின் சலேஹ் அல் சாதா குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதோடு 2014 தொடக்கம் அது பாதிக்கும் அதிகமாக குறைவடைந்துள்ளது. இதனால் எண்ணெய் சந்தையிலும் தேக்கநிலை ஏற்பட்டிருக்கும் சூழலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒபெக்கின் இந்த முடிவை அடுத்து ப்ரெண்ட் மசகு எண்ணெய் 10 வீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்று 51.94 டொலர்களாகவும் அமெரிக்க மசகு எண்ணெய் 9 வீதம் அதிகரித்து பீப்பாய் 49.53 டொலர்களாகவும் இருந்தன.

ஒபெக் நாடுகளின் இந்த எண்ணெய் வெட்டுக்கு ஏற்ப அதன் உறுப்பு அல்லாத எண்ணெய் ஏற்றுமதி நாடுகளும் தனது உற்பத்தியை நாளொன்றில் 600,000 பீப்பாய்களை குறைக்க எதிர்பார்ப்பதாக ஒபெக் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக ரஷ்யா நாளொன்றுக்கு 10 மில்லியனுக்கும் அதிக பீப்பாய் மசகு எண்ணெயை உற்பத்தி செய்யும் நிலையில் அது நாளுக்கு 300,000 பீப்பாய்களை குறைக்க எதிர்பார்த்துள்ளது.

“உலக பொருளாதாரத்தின் நலனை கருதி ஒபெக் உறுப்பு நாடுகளும் ஒபெக் உறுப்பு அல்லாத நாடுகளும் பொறுப்புடன் எட்டப்பட்ட உடன்பாடு” என்று அல் சாதா குறிப்பிட்டார். வியன்னாவில் நேற்று முன்தினம் நடந்த ஒபெக் நாடுகளின் கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை 10 வீதம் அளவுக்கு குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு நாளும் 12 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும்.

உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியா 4.5 வீதம் எண்ணெய் உற்பத்தியை குறைக்க இணங்கியுள்ளது. இதனால் சவூதி மாத்திரம் 5 இலட்சம் பீப்பாய் உற்பத்தியை குறைக்க உள்ளது. எண்ணெய் விலை குறைந்திருப்பதால் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

12col172322357_5068814_01122016_mss_cmy

Related posts: