எச்சரிக்கை – யாழில் இரு வாரங்களில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இரு வாரங்களுக்குள் பன்றிக் காய்ச்சல் (இன்புளுவன்ஸா வைரஸ்) தொற்று ஏற்பட்டுள்ளதாக இதுவரை 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இந்த நோய்த் தொற்றில் இருந்து தம்மை பாதுகாக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நோய் தாக்கம் இனங்காணப்பட்டிருந்தது. பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அண்மையில் தென்பகுதியில் குறித்த நோய்த்தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் யாழ். மாவட்டத்துக்குள் இந்த நோயின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது.
அந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து 10 பேர் வரையில் கடந்த இரு வாரங்களுக்குள் குறித்த நோய்த்தொற்று இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே தற்போது மழை காலமாக இருப்பதாலும் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது. அதாவது தொண்டை நொ, தடிமனுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது அதற்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டியது அவசியம் ஆகும்.
இது குறிப்பிட்ட சில தரப்பினரை உடனடியாக பாதிக்கின்றது. அதாவது 2 வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றா நோய் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாக்கப்படுகின்றனர்.
இது காற்றால் பரவும் நோயாக இருப்பதால் பொது இடங்களில் அநாவசியமாக செல்வதை தவிர்த்தல் அவசியம் எனவும் சனநெருக்கமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதுடன் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக அவசியம் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|