எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் – சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, June 26th, 2021

அண்மையில் இலங்கை கடற்பகுதியில் அனர்த்தத்திற்கு உள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள்கப்பலினால் நாட்டின் கடற்றொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக கோரப்பட்ட இழப்பீட்டை வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து, கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது.

இதனடிப்படையில், 715 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டுத் தொகை திறைசேரி திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளது.

இதேவேளை, இடைக்கால உரிமை கோரலுக்கான மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையை கோருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கும், முக்கிய உரிமை கோரலை மதிப்பிடுவதற்கும் பொருத்தமான சட்டத்தரணியொருவரை தெரிவு செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று தென் கடற்பிராந்தியத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

மூழ்கிக்கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்வதற்கு குறித்த குழு தென் கடற்பிராந்தியத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: