ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை அமைக்கப்பட வேண்டும் – பிரதமரிடம் தவிசாளர் ஜெயகாந்தன் கோரிக்கை!

Friday, June 8th, 2018

ஊர்காவற்றுறை பிரதேசமானது நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது வடபகுதியில் பாரிய உயிர்ச்சேதங்களையும் சொத்தழிவுகளையும் எதிர்கொண்ட ஒரு பிரதேசமாகும். தற்பொழுது சாதாரண சூழ்நிலை நிலவுகின்ற நிலையில் எமது பிரதேசம் படிப்படியாக முன்னேறி வருகின்றபோதும் எமது மக்களுக்கான அடிப்படை தேவைப்பாடுகளான வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து என்பனவற்றை பூர்த்தி செய்வதில் நிறைவற்றதன்மை காணப்படுகிறது. எனவே எமது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே குறித்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பிரதமரிடம் வழங்கியிருந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது இப்பிரதேச மக்களோடு இருந்து நாம் உதவி புரிந்ததன் அடிப்படையிலும் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்ட சேவைகளின் அடிப்படையிலும் எம் மீதான தொடர்ச்சியான நம்பிக்கையாலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினராகிய எம்மிடம் இரண்டாவது தடவையும் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களது தேவைகளை முன்னுணர்ந்து நிறைவேற்ற வேண்டியது எமது கடமைப்பாடாகும்.

அந்தவகையில் எமது பிரதேசத்தில் பெருமளவான படித்த இளைஞர்,யுவதிகள் வேலைவாய்புகளற்று இருக்கின்றனர். அத்துடன் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் போக்குவரத்து,வருமானம் போன்ற வசதி வாய்ப்புக்கள் இன்றி கல்வியை தொடரமுடியாமல் போன பெருமளவான மக்களும் எமது பிரதேசத்தில் உள்ளனர். அந்தவகையில் அவர்கள் அனைவருக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அந்தவகையில் அரச துறைகளில் வேலைவாய்ப்புக்களை வழங்கும் போது சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வியை பூர்த்தி செய்த எமது பிரதேச மக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அது போல் ஏனையோருக்கு, வேலைவாய்ப்புக்களை வழங்க கூடிய தொழிற்சாலைகளை எமது பிரதேசத்தில் அமைப்பதற்கு ஏற்பாடகள் செய்யப்ட வேண்டும்.

எமது பிரதேசத்தில் கடல்வளம் மற்றும் பனைவளம் உள்ள நிலையில் அவற்றின் மூலம் உற்பத்தியை மேற்கொள்ள கூடிய பொருத்தமான தொழிற்சாலைகளை எமது பிரதேசத்தில் அமைப்பதற்கும் விவசாயமும்,கடற்றொழிலும் பிரதான தொழிலாக உள்ள நிலையில் அவற்றுக்கான சந்தை வாய்ப்பு குறைவாக உள்ள நிலையில் சந்தை வாய்ப்பு பெற்று கொடுக்கப்பட வேண்டும்.

அத்துடன்; நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் இப்பிரதேசத்தில் உள்ள பெருமளவான வீடுகள் அழிந்து விட்டன. பெருமளவான மக்கள் குறைந்த வருமானம் பெறும் தொழிலை மேற்கொண்டுள்ளமையால் அவர்களால் வீடுகளை அமைக்க இயலவில்லை. இதனால் இப்பிரதேசத்தில் வாழும் கூடுதலான மக்கள் வீடுகள் இன்றி பாதுகாப்பற்ற குடியிருப்புக்களில் உள்ளனர். ஆனால் அரசாங்கத்தால் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுகின்றபோதும் தேவையோடு ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்றது.

இலங்கை மக்களுக்கு அரசாங்கத்தால் ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய வசதிகளில் ஒன்றாக வீட்டு வசதி உள்ள நிலையில் எமது மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்களை பெற்றுத்தருமாறு; கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் தீவகப்பிரதேசமானது ஊர்காவற்றுறை (கடலூடாக பயணத்தை மேற்கொள்ளும் அனலைதீவு எழுவைதீவு பிரதேச மக்கள்) வேலணை (கடலூடாக பயணத்தை மேற்கொள்ளும் நயினாதீவு, நெடுந்தீவு பிரதேச மக்கள்) ஆகிய பிரதேசங்களை கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும். மேலும் 50 கிலோ மீற்றருக்கு மேல் பயணத்தை மேற்கொள்ளும் வழித்தடங்கலை கொண்ட உள்ளடக்கிய பிரதேசமும் ஆகும்.

இருந்தபோதும் அதற்கான தனியான இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்துச்சாலை கிடையாது. 1990ம் ஆண்டுக்கு முன்னர் வேலணையில் தீவகத்திற்கென தனியான போக்குவரத்துச்சாலை இருந்ததுடன் யுத்தம் காரணமாக அது மூடப்பட்டது. தற்சமயம் தீவகம் வடக்கு பிரதேச செயலரால் இலங்கை போக்குவரத்து சபைக்கென இரண்டு ஏக்கர் காணி மெலிஞ்சிமுனை சுருவில் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபையின் தனியான போக்குவரத்து சாலை ஒன்றை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்வதுடன் அதன் மூலம் சிறப்பான சேவையினையும் இப்பிரதேச இளைஞர்,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினையும் வழங்கமுடியும் என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றேன்.

மேலும் தங்களுக்கான விசேட ஒதுக்கீட்டில் மேற்கொள்வதற்காக ஊர்காவற்றுறை பிரதேசசபையின் வேலைத்திட்டங்கள் கோரப்பட்ட போது எம்மால் மெலிஞ்சிமுனை இணைப்பு வீதிகள் திருத்தம்,தம்பாட்டி இணைப்பு வீதிகள் திருத்தம்,ஊர்காவற்றுறை பொது விளையாட்டு மைதானம் நவீனமயப்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

அவற்றுள் மெலிஞ்சிமுனை இணைப்பு வீதி திருத்த செய்யும் வேலை தெரிவு செய்யப்பட்டது. ஆனால் அவ்வேலை இதுவரை நிiவேற்றப்படவில்லை. எனவே அவ்வேலையை நிறைவேற்ற ஆவன செய்யுமாறும் எமது பிரதேச மக்களின் விளையாட்டு திறனை விருத்தி செய்யும் நோக்கில் ஊர்காவற்றுறை பொது விளையாட்டு மைதானம் நவீனமயப்படுத்தி தருமாறும் தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Untitled-4 copy

Related posts: