ஊடகவியலாளர்களுக்கு சிறந்த சம்பளத்தொகை!  – ஊடக அமைச்சர்

Thursday, June 30th, 2016

நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களின் தொழிலுரிமையைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்த சம்பளத் தொகையொன்றினை நிர்ணயிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும்,பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்களின் தொழிலுரிமையைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்த சம்பளத் தொகையொன்றினை நிர்ணயிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் நலன்புரி விடயங்களிலும் கவனம் செலுத்தப்படும்.
பல வருடங்களாக மேற்கொண்ட முயற்சி தற்போது நிறைவேறியுள்ளது. தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தகவல் ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அதிகாரிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. உரிய அரச அதிகாரிகளை அரச நிறுவனங்களில் நியமிக்க வேண்டியுள்ளது. அதற்காக 4 ஆயிரம் அரச நிறுவனங்களுக்கு சுமார் 8 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்க வேண்டியுள்ளது. இதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஊடகவியலாளர்கள் தொழில் ரீதியாக பலப்படுத்தப்பட வேண்டும். சுயாதீன ஊடகத்துக்கான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான கொள்கைகள், முறைமைகள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். அனைத்தினையும் கவனத்தில் கொண்டு ஊடகத்துறையினை மேலும் பலப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: