உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு – தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இன்று (11) இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக, கடந்த மார்ச் 9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த, உள்ளூராட்சி தேர்தல், எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம்திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும்,தேர்தலுக்கு அவசியமான நிதி ஏற்பாடுகள் கிடைக்காமை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் நிர்வாகத்துக்கு அப்பாற்பட்ட காரணங்களினால், தேர்தல் பிற்போடப்படுவதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இரண்டாவது தடவையாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தலுக்கு தேவையான நிதி கிடைப்பதற்கான உறுதியான திகதி அல்லது தேர்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் புதிய திகதியொன்று தீர்மானிக்க வேண்டியேற்படின், தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலை பெற்றுக்கொண்டதன் பின்னர் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படுவதாக அந்த அறிக்கையில், தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: