உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி – ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, September 29th, 2022

உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்து மீளுவதற்கு உள்நாட்டு முயற்சியும், வெளிநாட்டு உதவியும் தேவையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினன் ஆர் மார்கஸ் ஜூனியருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது இன்று காலை தலைநகர் மனிலாவில் உள்ள மலாகானாங் மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையில் உள்ள நீண்ட கால நட்புறவை புதிய அணுகு முறைகள் மூலம் மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்தப் பயணத்தை நிறைவுசெய்து, நேற்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவை சென்றடைந்தார்.

பிலிப்பைன்ஸ் விஜயத்தை நிறைவுசெய்து, எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: