சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை சோதனையிட விசேட நடவடிக்கை!

Tuesday, May 17th, 2022

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை  சோதனையிட காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே நேற்று முன்தினம் பெப்பிலியான பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 50,000 யூரோக்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பணம் எவ்வாறு சம்பாதித்தார்கள் அல்லது எவ்வாறு கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதேவேளை, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் பெறுமதியான 47,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை முழுமையாக முறியடிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை புறக்கோட்டை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: