உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கம்!

Monday, March 28th, 2022

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரையிலான விமானங்கள் தொடர்பாக உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு பல தசாப்தங்களாக விதிக்கப்பட்டிருந்த தடை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தெமியா அபேவிக்ரமவால் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் அனுமதியுடன் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தெமியா அபேவிக்ரம கூறுகையில் –

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கட்டுப்பாடு நடைமுறையில் இருந்த போதிலும், இது உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறைக்கு தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டுப்பாடு காரணமாக சில விமான இயக்குனர்கள் தங்கள் பணியாளர்களுக்கும், பயணிகளுக்கும் திட்டமிடப்படாத தங்கும் இடங்களை வழங்க வேண்டியிருந்தது. இதனால் இயக்குனர்களுக்கு கூடுதல் செலவாகும்.

இதேவேளை தடை நீக்கப்பட்டாலும், விமானிகள் மற்றும் விமான இயக்குனர்கள் மாலைநேரம் மற்றும் அதிகாலைக்கு இடையில் செயற்படும் போது இரவு நேர பறத்தலுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: