உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டம் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். அதனை தற்போதைய நவீன யுகத்திற்குப் பொருத்தமாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எனவே அப்பணியினை மேற்கொள்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுடனான சந்திப்பு ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் –
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் அதன் செயற்பாடு முடங்கிப்போயுள்ளதாக சிலர் குற்றஞ் சாட்டுகின்றனர். எனினும் திறமையான அரசியல்வாதிகள் இருப்பதுபோல் திறமையான அதிகாரிகளும் உள்ளனர். ஆகவே அக்குற்றச்சாட்டுக்களுக்கு இடமளிக்காது அது தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நீங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் நகரபிதாக்களின் வகிபாகங்களில் உள்ளீர்கள். ஆகவே நீங்கள் அரசியல்வாதிகள் இல்லாவிடத்தும் அவர்களைப் போல் மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணி சேவை செய்ய வேண்டும். மேலும் இவ்வாறான காலகட்டத்தில் முடியுமாயின் விடுமுறை நாட்களிலும் மக்களுக்கு சேவை செய்ய பின்நிற்கக்கூடாது.
பொதுவாக மக்கள் தங்களின் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்களிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தால், அது தொடர்பிலான முடிவினை 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு உரியமுறையில் சேவையினை வழங்கினால்தான் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்கில் மக்களுக்கு நன்மதிப்பு ஏற்படும்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் துஷ்பிரயோகம் மற்றும் விரயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண் டும். வருமான மார்க்கத்தில் இடையூறு கள் இருப்பின் சட்டப்படி அணுகி உரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சோலைவரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏராளமானோர் பௌதீக அபிவிருத்தியே சிறந்த பலனைத் தருவதாகக் கருதுகின்றனர். எனினும் மனிதவள அபிவிருத்தியின் மூலம் அதிகளவான பிரயோசனங்களை அடையமுடியும். ஆகவே எதிர்காலத்தில் மனிதவள அபிவிருத்தி தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் அதிக கரிசனை காட்ட வேண்டும்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களினூடாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்போது காலக்கெடு தொடர்பில் உரிய அவதானம் செலுத்தவேண்டும். குறி த்த காலப்பகுதியில் வேலைத்திட்டங்களை பூர்த்திசெய்யாத ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் அதன் இலாபம், நஷ்டம் தொடர்பில் அவதானம் செலுத்தாது வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|