உலக தரவரிசையில் இலங்கையின் கடன் தரப்படுத்தல் குறைந்தாலும் இலங்கை மீதான சீனாவின் நம்பிக்கை குறையவில்லை – சீன தூதுவர் தெரிவிப்பு!

Monday, March 21st, 2022

சீனாவிடம் இருந்து இலங்கை மேலும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக கோரி இருப்பதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு பில்லியன் டொலர் கடனாகவும், 1.5 பில்லியன் டொலர் கடன் எல்லை வசதியாகவும் வழங்குமாறு சீனாவிடம் இலங்கை கோரியுள்ளது.

இந்நிலையில் இந்த கடனுதவி கோரிக்கை தொடர்பாக சீனா தற்போது பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் (Qi Zhenhong) பங்கேற்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பில் உள்ள முன்னணி விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சீன – இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் அண்மைக் காலமாக சீர்குலைவை அவதானிக்கக் கூடியதாகவுள்ள அதேவேளை, சீனாவிலிருந்து இலங்கை வந்த உரக்கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்த தீர்மானம் மற்றும் கொழும்பு கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர பகுதிக்கான ஒப்பந்தத்தை முன்வைத்த சீன நிறுவனத்துக்கு குறித்த கட்டுமாண ஒப்பந்தத்தை வழங்காமை என இந்த நிலைமைக்கு காரணங்களாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தவிர, இலங்கை அரசாங்கம், இந்திய அரசுடன் இந்த நாட்களில் கொண்டுள்ள வலுவான நட்பும், சீனாவுடனான நல்லுறவுக்கு ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கைக்கு அதிகளவில் வெளிநாட்டு கடன் உதவிகளை வழங்கியுள்ள நாடாக சீனா காணப்படுகிறது. இலங்கையின் அபிவிருத்திக்காக சீனாவினால் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

“இலங்கையும் சீனாவும் மிக நல்ல நண்பர்கள். நெருக்கடியான காலங்களில் சீனா தமது நண்பர்களை கைவிடாது. உலக தரவரிசையில் இலங்கையின் கடன் தரப்படுத்தல் குறைந்தாலும் இலங்கை மீதான சீனாவின் நம்பிக்கை குறையவில்லை. 2020 ஆண்டு முதல் சீனா 2.8 பில்லியன் டொலர் நிதியுதவியை அளித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வழங்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் டொலர் நாணய பரிமாற்றமும் (currency swap)  அதில் உள்ளடங்கும். அவ்வாறே, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிக்க அந்நாட்டின் தனியார் துறையை சீனா ஊக்குவிக்கிறது என சீன தூதுவர் இதன்போது கருத்து வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை சாதகமாகப் பயன்படுத்த சீனா விரும்பவில்லை என்றும் சீன தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்கின்றனவா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிதி விவகாரங்களில் இரு நாடுகளும் மிகத் தெளிவான புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: