உலக உணவுத் திட்டத்தால் வடக்குப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு நிறுத்தம்

Wednesday, November 8th, 2017

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு 14 வருடங்களாக வழங்கப்பட்டு வந்த உலக உணவுத்திட்டத்தின் கீழான உணவு வழங்கல் ஒப்பந்தம் கடந்த திங்கட்கிழமையுடன் நிறைவடைந்து விட்டது. எனினும், எஞ்சியிருக்கும் உலருணவுகளை வைத்து இந்தத் தவணை நிறைவடையும் வரை மாணவர்களுக்கு உணவு வழங்கப்படவுள்ளது. அடுத்த வருடத்துக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மாணவர்களுக்கென சிறப்பாக இந்தத் திட்டம் 2013 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. மாணவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்துதல், பசியோடு அவர்கள் கல்வி கற்பதைத் தவிர்த்தல், அவர்கள் பாடசாலைக்குக் கற்றலுக்காகச் செல்வதை ஊக்கப்படுத்தல், பாடசாலையிலிருந்து இடைவிலகலைத் தவிர்த்தல் ஆகிய காரணங்களுக்காகவும் உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

உலக உணவுத் திட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை அரசுக்குமான ஒப்பந்தத்தின்படி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

திட்டத்தில் தரம் 1 தொடக்கம் தரம் 9 வரையான மாணவர்கள் பயனடைந்தனர். மேற்கொண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுக்க உலக உணவுத் திட்டத்தின் செயற்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

உணவு வழங்குவது நிறுத்தப்படுமானால் அது மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். போரால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவரும் போது அதற்கு உதவுவதாகவே திட்டங்கள் இருக்க வேண்டும். திட்டங்கள் இடைநிறுத்தப்படுவது, தடுக்கப்படுவது பொருத்தமில்லை என்று கல்விச் சமூகத்தினர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நிதி கிடைப்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இதுவரையில்லை என்று மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும் ஏதாவது ஒரு திட்டம் மாற்றுத் திட்டம் வரும் என்று எதிர்பார்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:


வவுனியா மன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவுமக்கள் அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை!
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பலி – பொதுக் கல்வ...
பொலிஸ் அதிகாரியால் விடுமுறை மறுப்பு - திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு - பல...