உலகின் சக்திகளிடம் சரணடைய முடியாது – கடன் பொறியிலிருந்து விடுபடுவதற்காக கடன் மறுசீரமைப்பு அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நிறைவு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023

பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ள நாம் கடன் பொறியிலிருந்து விடுபட வேண்டும். அதற்காக உலகின் பொருளாதார சக்திகளிடம் சரணடைய முடியாது. நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியுமென்று நம்புகின்றேன். இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷண விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும்.

நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஐம்பதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இப்போது மீண்டும் ஒரு போர் நடக்கும் போது, 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். அது துப்பாக்கிகளை எடுத்து ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் போர் அல்ல. இன்று நாம் ஒரு பாரிய பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ளோம்.

இன்று நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பாவிட்டால் இந்த கடன் பொறியிலிருந்து விடுபடாவிட்டால், எமது நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போய்விடும். நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை.

இன்று உலகின் பொருளாதார சக்திகளிடம் நாம் சரணடைய முடியாது. எனவே பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களை வாழ வைப்பதே நமது முதல் பணியாக இருக்க வேண்டும்.

அதே போன்று மக்கள் இழந்த வருமான வழிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். இன்று பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

சில அரச ஊழியர்கள் கடன் வாங்கி வரியும் செலுத்தும் நிலையில் வருமானம் இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர்.

இந்த அழுத்தத்தை நாம் அனைவரும் தாங்க வேண்டியுள்ளது. இந்த அழுத்தத்தை நம்மால் நீக்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: