உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது அவசர தேவையாக உள்ளது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது தற்போது அவசர தேவையாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று ஆரம்பமான ஜீ 77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்துருவ உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நவீன உலகளாவிய சர்வதேச கடன் தீர்வு மாதிரிகளில், பாரிஸ் கிளப் மற்றும் லண்டன் கிளப் என்பவற்றின் கடன் தீர்வு பொதிகள் தொடர்பான கொள்கை உலகிற்கு மிகவும் பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது, உலகளாவிய கடன், குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன், பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச திறைசேரி முறிச் சந்தையில் உறுப்பினரல்லாத கடன் வழங்குநர்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள நிதி வளங்களை, கடன் சேவையாக பெற்றுக்கொள்ளும் போது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அத்தியாவசியமான பொது சேவைகள் மற்றும் மனித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான தேவையான செலவுகளுக்கு நிதி வசதிகளை வழங்க முடியாமல் போகிறது.
எனவே, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் அது பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பாரிய கூட்டணியாக, ஜீ 77 காணப்படுகிறது.
உலகளாவிய தென் துருவ நாடுகள் தங்கள் கூட்டுப் பொருளாதார நலன்களை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும், அத்துடன் ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்குள் சர்வதேச பொருளாதார பிரச்சினைகளை கூட்டாக விவாதிக்கவும் இடத்தை வழங்குகிறது.
குறித்த நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடர்பில், இந்த உச்சிமாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
வர்த்தகம், முதலீடு, நிலையான அபிவிருத்தி, காலநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அதன் 134 உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|