உறவுகள் காணாமல் போனோர்: சான்றிதழ்களை பெறுவதே நல்லது! – பரணகம

Tuesday, March 22nd, 2016

உறவினர்களை தொலைத்துவிட்டு இருக்கின்றவர்கள் காணாமல்போனோர் தொடர்பானசான்றிதழ்களை பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு வின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காணாமல்போனோர் குறித்து விசாரணைகளை  நடத்திவந்தோம். அந்தவகையில் இன்னும் சிறிது காலத்தில் எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நிறைவுக்கு வரவுள்ளன.அதன்படி விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரைகளுடன் கூடிய எமது அறிக்கையை சமர்ப்பிப்போம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவென்பது காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் பரிந்துரைகளும் அறிக்கைகளையும் மட்டுமே வழங்குவதற்கு அதிகாரத்தை கொண்டுள்ளது. மாறாக பிரச்சினைகளை நேரடியாக தீர்ப்பதற்கு அதிகாரமும் வளமும் எம்மிடம் இல்லை. ஆனால் நாங்கள் சில விடயங்களில் விசாரணைக்குழுக்களை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.

இது இவ்வாறிருக்க ஒருசிலர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் எமது ஆணைக்குழுவிடம் காணாமல்போனோர் குறித்து முறைப்பாடுகள் செய்துள்ளமையை எமது விசாரணைக்குழு கண்டுபிடித்துள்ளது.அதாவது உறவினர்கள் பல தடவைகள் இவ்வாறு முறைப்பாடுகளை செய்துள்ளனர். எனவே மொத்தமாக காணாமல்போனோர் தொடர்பாக கூறப்படும் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

அத்துடன் உறவினர்களை தொலைத்துவிட்டு இருக்கின்றவர்கள் காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். எனவே காணாமல்போனோரின் உறவினர்கள் அரசாங்கம் வழங்கும் காணாமல்போனர்  குறித்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: