உருத்திரபுர ஈஸ்வரர் ஆலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!

Friday, May 19th, 2023

தொல்பொருள் திணைக்களத்தினரால் நில அளவை செய்யப்படவிருப்பதாக சர்ச்சை ஏறபட்டிருந்த கிளிநொச்சி உருத்திரபுர ஈஸ்வரர் ஆலயத்துக்கு, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் கோ.றுஷாங்கன் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

ஏற்கனவே இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குச் செய்திருந்த முறைப்பாட்டையடுத்து, ஜனாதிபதியுடன் பேசி நில அளவைப் பணிகளை தடுத்து நிறுத்த அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனினும், அச்சம் காரணமாக, ஆலயத்தில் இன்றையதினம் பெரியளவில் பூசை வழிபாடும், அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவு பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

இதையறிந்து, அமைச்சரின் பணிப்பின் பேரில் ஆலயத்துக்கு நேரில் சென்ற அமைச்சரின் பிரத்தியேக உதவியாளரும், ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளருமான றுஷாங்கன், ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள், பக்தர்கள், உள்ளூர் மக்களைச் சந்தித்து அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்ற அமைச்சரின் செய்தியை நேரில் தெரிவித்திருந்தார்.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் பசுபதிப்பிள்ளை, உப தலைவர் சிவஞானசுந்தரம், செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் அமைச்சரின் இணைப்பாளருடன் நீண்ட நேரம் கலந்துரையாடி, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்ததுடன், இணைப்பாளர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு அன்னதான உணவு வழங்கி உபசரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: