உயிர் அச்சுறுத்தல் – முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா பதவி விலகல்!

Friday, September 29th, 2023

குருந்தூர் மலை விவகாரம், தொடர்பான வழக்கினை ஆராய்ந்து வந்த, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா தமது, பதவி விலகல் கடிதத்தை, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி குறித்த கடிதத்தை அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தாம் வகித்து வந்த அனைத்தையும் நீதவான் பொறுப்புகளில் இருந்தும் விலக தீர்மானித்ததாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குருந்தூர் மலை விவகாரத்தில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு நீதவான் ரீ.சரவணராஜா தீர்ப்பளித்திருந்தார்.

இந்தவிடயத்தில், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து செயற்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில், முல்லைத்தீவு நீதவானின் தீர்ப்பு குறித்து விமர்சித்திருந்தார்.  

இவ்வாறான சூழலில், முல்லைத்தீவு நீதவான் தமது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: