உயிரிழப்புகள் தொடர்பிலான தரவுகளை வெளியிடும் போது சரியா இறுதிப்படுத்தப்பட்டதாக இருப்பது அவசியமாகும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்து!

Saturday, June 19th, 2021

கொரோனா தொற்று இல்லாதவர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதிக்கிரியையை 24 மணி நேரத்துக்குள் நடத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இறுதிக் கிரியைகளின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளபோதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜூன் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் இறுக்கமான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும். அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியின் உடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் ஒழிப்புக்கான விசேட குழு, நேற்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்று கூடிய போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் மாதம் 14 ஆம் திகதி அன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜூன் மாதம் 11 ஆம் திகதி அன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி அதன் பின்னர், குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக சில மரணங்கள் பெப்ரவரி 06 முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் ஜூன் 11 ஆம் திகதி, 15 மரணங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இறுதிப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: