உணவக ஊழியர்களுக்கு மருத்துவச்சான்று கட்டாயம்!

Friday, January 25th, 2019

உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு பகுதியிலும் இயங்கும் உணவகங்களைச் சிறந்த சுகாதார பழக்க வழக்கமுள்ளதாகவும் சிறந்த உற்பத்திச் செயற்பாடுகளைக் கொண்டதாகவும் மாற்றியமைக்க வேண்டும்.

பௌதீக வளம் குறைந்த உணவகங்களை உற்பத்தி அளவுக்கேற்ற வகையில் அமைத்து பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் நிலையங்களாக செயற்படுத்த வேண்டும். உரிய செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காத நிலையங்களை மூடிச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடிமன், காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்பட்டால் கட்டாய விடுமுறை வழங்கப்படல் வேண்டும்.

பணியாளர்கள் அனைவரும் சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்தினால் வழங்கப்பட்ட மருத்துச் சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

சமைத்த – சமைக்காத உணவுகள் தனித்தனியாகக் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டு வெப்பமானி மூலம் பேணப்படல் வேண்டும். அதற்கென தனியான பதிவேடு வைத்திருப்பது பொருள்கள் வைக்கும் நேரம் எடுக்கும் நேரம் வெப்ப அளவு போன்றவை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கழிவுகளை அவற்றுக்குரிய தொட்டிகளில் நீண்ட நேரம் வைத்திருக்காமல் உடனுக்குடன் வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும். அதற்கென தனியான ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும்.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத உணவு நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்லாத அளவுக்குப் பார்க்கவேண்டுமெனவும் இந்த நடைமுறை விரைவில் சுகாதார அமைச்சினால் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பணியகங்களுக்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: