உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு நான் பொறுப்பல்ல -சட்ட மருத்துவர்!

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு தான் எந்த விதத்திலும் பொறுப்பில்லையென பிரதான சட்ட மருத்துவ முன்னாள் அதிகாரி ஆனந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த விடயம் தொடர்பில் தன்னை கைது செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் முன் பிணை கோரியுள்ளார். இவரின் இந்த முன் பிணை மனுவை எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தாஜுதீனின் சடலத்தின் உடல் பாகங்கள் காணாமல் போனது தொடர்பில் விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்யத் தயாராவதாக தெரிவித்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மேற்படி மனு கொழும்பு மேலதிக நீதவான் சரனி ஆடிகலவின் முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டது.இந்த மனுவை விசாரணை நடத்த திகதி அறிவிக்குமாறு மனுதாரர் சார்பில் கோரப்பட்டது.
இதனையடுத்து எதிர்வரும் 30ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள கொலை விசாரணை பிரிவு பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது. இந்த சம்பவத்துடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தான் 2013 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றதாகவும் அதன் பின்னர் தாஜுதீனின் உடல் பாகங்கள், களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த குளிரூட்டியில் இருந்து வேறு குளிரூட்டிக்கு உடற் பாகங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் போதே உடல் பாகங்கள் காணாமல் போனதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வசீம் தாஜுதீன் 2012 மே 17ம் திகதி நாரஹேன்பிட்ட சாலிகா விளையாட்டு மைதானத்திற்கருகில் கார் விபத்தில் உயிரிழந்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|