அசாதாரண நிலைமைக்கு சில நாட்களில் சுமுக தீர்வு – எதிர்க் கட்சி அரசியல் குழுக்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் வருத்தமளிக்கிறது – போராட்டம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022

மிகவும் திட்டமிட்ட மற்றும் நீண்ட முயற்சிக்குப் பிறகு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வுகள் காணப்பட்டுவரும் நிலையில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் எதிர்க் கட்சி அரசியல் குழுக்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது நாட்டை மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத் திட்டம் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் நிலைமைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள ஊடக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; –

அத்தியாவசிய மருந்துகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இந்திய கடன் வசதிகளின் கீழ் 65,000 மெற்றிக் தொன் உரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 44,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றி வரும் முதலாவது கப்பல் இன்று (09) நாட்டை வந்தடையும். ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து பெறப்படும்.

அத்தோடு பல்வேறு விவசாயத் திட்டங்களின் கீழ், நாட்டில் உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 ஆவது திருத்தம் ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிக்கல் நிலைமைக்கு வெற்றிகரமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்களை ஏமாற்றி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வருந்தத்தக்கது என்றும் ஜனாதிபதி கூறினார்.

எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.

ஆனால் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் கோவிட் தொற்றுநோய் நிலைமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளது. பெரும் பணக்கார நாடுகள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு தேடுகின்றன.

சர்வகட்சி ஆட்சியில் இந்தப் பின்னணியில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்ததால் .ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் கடன் உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணி அமைக்கப்பட்டுள்ளது. பல நாடுகளின் தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் எதிர்கால சந்ததிக்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என எதுவும் கிடையாது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அற...
கடத்தலுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பெரும் அடியாக அமைந்தது ...
கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்!