ஈ.பி.டி.பியின் எழுக தமிழ் கூட்டுப்பேரணியாளர்கள் மீது தமிழ் மக்கள் பேரவையின் காடையர்கள் அராஜகம்! (காணொளி இணைப்பு)

Sunday, September 25th, 2016

 

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு பேரணியில் கலந்துகொள்ளும் பொருட்டு கரவெட்டி பிரதேசம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் வந்த மக்களை தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் எழுச்சி பேரணி ஏற்பாட்டாளர்கள் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவத்தை  புத்திஜீவிகள் பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு பேரணி நேற்றையதினம்(24)  கட்சியின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமாகி பிரதான வீதிகளினூடாக நகர்ந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலை சென்றடைந்து அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் எழுச்சிக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

முன்பதாக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதனின் ஒழுங்குபடுத்தலில் அப்பிரதேசத்திலிருந்து  கட்சியின் எழுக தமிழ் கூட்டுப் பேரணியில்  கலந்துகொள்வதற்காக பேருந்துகளில் வந்துகொண்டிருந்த மக்களை தமது பேரணியில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தி பேருந்துகளிலிருந்து இறங்குமாறு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பேருந்துகளில் வந்தவர்களை வழிமறித்து தாக்கினர். அத்துடன் பேருந்துகளை கவிழ்க்கும் முயற்சியிலும் பலாத்காரமாக ஈடுபட்டனர்.

இதனால் பேருதுகளில் வந்த மக்கள் அச்சமும் பீதியும் கலந்த நிலையில் கூச்சலிட்டு அபயக்குரல் எழுப்பினர். இது தொடர்பான காணொளிக்காட்சிகள் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஒன்பது பேருந்துகளில் வந்த மக்களையும் தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினர் தாக்கியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த பேரணிக்கு, போதுமான அளவில் மக்களை திரட்டமுடியாது திண்டாடிக்கொண்டிருந்த குறித்த அணியினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வடபகுதியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த மக்களை தமது பேரணிக்கு வருமாறு நிர்ப்பந்தித்த செயலை புத்திஜிவிகள் பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின் நிறைவில் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற எழுச்சிக் கூட்டத்தில் எழுச்சி உரைகள் ஆற்றும் போது  அதனை குழப்பும் நோக்கில் திட்டமிட்ட வகையில் பாடல்களை உரத்து  ஒலிபரப்பி மக்களுக்கு இடையூறுகளை விளைவித்திருந்தனர்.

இருந்தபோதிலும் பல இடையூறுகழுக்கும் தடைகளுக்கும் மத்தியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுச்சிப் பேரணியும் எழுச்சிக் கூட்டமும் பல்லாயிரக்கணக்காண மக்களின் பங்கேற்புடன் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: