இழப்பீட்டை வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் கவனத்திற்குரியதாக உள்ளது – கிளி் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் அமீன் தெரிவிப்பு!

இழப்பீட்டை வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் மேலான கவனத்திற்குரிய ஒரு பிரச்சினையாகுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்துள்ளார்.
கல்மடு குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக்கான விவசாய குழு கூட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாவட்டம் தழுவி நெல்விளைச்சலுக்காக வெவ்வேறு தரநிலைகளில் வயல் நிலங்கள் இருந்து வருவதை கவனத்தில் எடுத்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில் –
இன்று பல்வேறு காரணங்களுக்காக வயல் நிலங்களின் விளைச்சல் அளவு வெகுவாக மட்டுப்படும் ஒரு சூழலில் தமது நெல் உற்பத்தியை முன்னெடுக்க முடியாத அளவுக்கு பெரும் சுற்றாடல் பாதிப்புக்களை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத மணல் அகழ்வுகளால் வயல் நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகும் நிலமைகள், செயற்கை உரம் பாவனையின் பக்க விளைவுகளால் நிலங்கள் உவராதல், உவர்நீர் தடுப்பணைகள் அழிவடைந்துள்ள நிலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் வெள்ளம், வரட்சி, நோய்த்தாக்கம் என பல்வேறு காரணங்களுக்காக நிலங்களின் விளைச்சல் அளவு வெகுவாக மாற்றமடைந்திருக்கிறது.
எனவே அந்தந்த கமநல சேவை நிலையங்களின் கீழ் வரும் வயல் நிலங்களை அறுவடையாகும் நெல்லின் சாத்தியமான அளவை உத்தியோகபூர்வமாக வரையறுக்கிற ஒரு பொறிமுறை சாத்தியமாகும் போதே பாதிக்கப்படும் நெற் செய்கையாளருக்கான இழப்பீட்டை துறைசார் திணைக்களம் வரையறை செய்வதும் சாத்தியமாகும்.
வீதிகளில் நெல்லை உலரவிடும் வழிமுறையால் விபத்துக்கள், மரணங்கள் மட்டுமன்றி காப்பெட் வீதியில் கூடுதல் வெப்பம் அதன் மூலமான ஆவியாக்கம் உலரும் நெல் நச்சுத்தன்மை அடைவதாக ஆய்வுகளில் இருந்து அறியக் கூடியதாக இருப்பதுடன் இவற்றின் முளைதிறன் வெகுவாக மட்டுப்பட்டிருப்பதாகவும் மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரிய வந்திருப்பதை அனைத்து விவசாயிகளும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அறுவடை காலங்களில் நெல்லின் விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்து, உள்ளீடுகளின் அதிகரித்த செலவினங்கள், மற்றும் செயலிழந்துள்ள கிருமிநாசினிகள், இவற்றால் ஏற்படும் புதிய வகை நோய்கள் என பல்வேறு பெரும் பாதிப்புக்களை நீங்கள் எதிர் கொண்டிருப்பதை நாமும் புரிந்து கொள்கிறோம்.
கல்மடு குளம் எமது நீர்ப்பாசன திணைக்கள உதவி பணிப்பாளர் கருணநிதி அவர்களின் அர்ப்பணிப்பான சேவையில் குறுகிய காலத்தில் அபிவிருத்தி கண்டிருப்பதையிட்டு உங்கள் அனைவரதும் சார்பில் அவருக்கு எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலதிக மாவட்ட அரச அதிபர் முரளீதரனின் தலைமையில் நடைபெற்ற இச் சந்திப்பில் துறைசார் திணைக்கள அதிகாரிகள், கண்டாவளை பிரதேச அமைப்பாளர் தோழர் கமல் மற்றும் கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|