இலத்திரனியல் உபகரணங்கள் மண்டபத்துக்கு எடுத்துச்செல்ல தடை!

Thursday, July 28th, 2016

ஓகஸ்ட் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் எடுத்து வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சை மண்டப நோக்குனர்களும் மேற்கூறப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை பாவிக்கவோ கொண்டுவரவோ கூடாது எனவும்  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நோக்குனர்கள் அவர்களது தொலைபேசிகளை மூடி மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டே மண்டபத்தினுள் வரவேண்டும். மேற்பார்வையாளர் மாத்திரம் தனது செல்லிடத்தொலைபேசியை அமைதியில் வைத்த்திருக்க அனுமதியுண்டு. நோக்குனர்கள் யாராவது மண்டபத்தினுள் தொலைபேசி வைத்திருந்து பிடிபட்டால் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வியமைச்சின் திடீர் சோனைக்குழுக்கள் நாடளாவியரீதியில் பரவலாக சோதனையில் ஈடுபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பரீட்சையை நேர்மையாகவும் நீதியாகவும் நடத்த பரீட்சை ஊழியர்கள் கூடுதல் ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கவேண்டும் என பரீட்சைத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி உபகரணங்கள் பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகளுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பெறுபேறுகள் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு 05 வருடங்களுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டாது. கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரம் அல்லது இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும்.

எதிர்வரும் 02 ஆம் திகதி க. பொ. த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவற்றை கண்டுபிடிப்பதற்கென நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வலய மட்டத்திலும் விசேட குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை மாணவர்கள் எடுத்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக கண்காணிக்குமாறு பரீட்சை மண்டப உத்தியோகத்தர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: