இலட்சியமும் கொள்கைப்பற்றும் இல்லாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் – தொண்டமானாறு பகுதி மக்கள் ஆதங்கம்!
Sunday, June 12th, 2016
இலட்சியப்பற்றும், கொள்கைப்பற்றும் இல்லாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்றும், அவர்களது அரசியல் பொய்த்தன்மையானது என்பதே யாதார்த்தமாகும் என்றும் தொண்டமானாறு, அரசடி பகுதி மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடமராட்சி, தொண்டமானாறு, அரசடி, கலைவாணி சனசமூக நிலையத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (12) அப்பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.
பண்டா – செல்வா ஒப்பந்தம் முதலான ஒப்பந்தங்களில் எவற்றையேனும் மக்கள் சார்பாக நடைமுறைப்படுத்த எமது தமிழ்த் தலைமைகள் முன்வராதமை எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது. இறுதியாக இடம்பெற்ற இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால், நாம் இன்று அழிவுகள் இழப்புகள் இல்லாமல் சுயநிர்ணயத்துடன் வாழக்கூடியதானதொரு சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கும். ஆனால், இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாத தமிழ்த் தரப்புகளால் நாம் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளையும் உடமை இழப்புகளையும் சந்தித்து பேரவலத்திற்கு உள்ளாகியிருந்தோம்.

இலட்சியப்பற்றும், கொள்கைப்பற்றும் இல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது எதிர்காலம் தொடர்பில் எவ்விதமான அக்கறை கொண்டதாகவோ, வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டங்களை மாகாணத்திலும் மத்தியிலும் அதிகாரங்களைக் கொண்டிருந்த போதிலும் முன்னெடுக்காமல் இருப்பது ஏன் என்று எண்ணத் தோன்றுகின்றது என்பதுடன், இதனூடாக அவர்களது அரசியல் பொய்த்தன்மையானது என்பதை புலப்படுத்தி நிற்பதாகவும் நாம் அவர்களது பொய்த்தனமான அரசியலால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பது மட்டுமல்லாமல் இன்றும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பகுதி நிர்வாக செயலாளர் குமார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.





Related posts:
|
|
|


