இலங்கை வரும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் அவசியமில்லை – வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!
Saturday, December 11th, 2021
நாட்டுக்கு வருவதற்கு முன்னர் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளை சுற்றுலாப் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 12 வயதுக்கு மேற்பட்டோர் இலங்கைக்கான விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பரிசோதனை அறிக்கையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 754 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. அவர்களில் இருவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்து 426 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 377 பேர் நேற்று குணமடைந்தனர். இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 44 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே நாட்டில் மேலும் 18 பேர் கொவிட்-19 தொற்று காரணமாக மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இறுதியாக இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 காரணமாக மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


