இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா – செயற்திறன் வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021

அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளையதினம் இலங்கை வருகைதரவுள்ளார்.

நாளையதினம் நாட்டிற்கு வரும் அவர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார். இக்காலப்பகுதில் ஆடையுற்பத்திக் கைத்தொழில், தேயிலைப் பயிர்ச்செய்கை, சுற்றுலாத்துறை உள்ளடங்கலாகப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை தொடர்பில் அவர் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் தொழிலாளர்கள் தொடர்பான சட்டம் மற்றும் கொள்கைகளின் அமுலாக்கம் குறித்தும் மதிப்பீடுகளையும் அவர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு பூர்த்தி செய்யப்படவேண்டிய, இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகள் தொடர்பான முன்னேற்றகரமான நகர்வுகள் குறித்து அறிந்துகொள்வதற்கு நான் பெரிதும் விரும்புகின்றேன்’ என டொமோயா ஒபொகாடா தெரிவித்துள்ளார்.

அதோடு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு நபர்களை வலுகட்டாயமாகத் தொழிலில் ஈடுபடுத்துவதை முடிவிற்குக் கொண்டுவரல், நவீனகால அடிமைத்துவம் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றை இல்லாதொழித்தல் சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடுத்தல் மற்றும் இல்லாதொழித்தல் ஆகியவை பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அரசாங்கம் உள்ளடங்கலாக அரச கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பில் செயற்திறன்வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் ஒபொகாடா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கான அவரது விஜயத்தின் நிறைவு நாளான டிசம்பர் 3 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில்வைத்து ரொமோயா ஒபொகாடா அவரது ஆரம்ப அவதானிப்புக்களை வெளியிடுவார்.

அத்தோடு 2022 செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் அவர் இலங்கை தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பார் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்த அரசியல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான திணைக்களத்தின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளர் காலித் கியாரியின் பணிகள் இன்றுடன் முடிவிற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: