இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது – மத்திய வங்கியின் ஆளுநர் குற்றஞ்சாட்டு!

Saturday, February 17th, 2024

இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குற்றஞ்சாட்டிடியுள்ளார்.

நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலான உண்மைகளை மத்திய வங்கியின் ஆளுநர் இதன்போது வெளிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் –  கடந்த ஆண்டு நடந்தது நாட்டின் திவால்நிலை அல்ல, சில தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் தீர்வை ஒத்தி வைப்பதே தவிர வேறில்லை.

அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்ததாகவும் அதில் திவால் பிரகடனம் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பானது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அசௌகரியங்கள் தொடர்பில் நீண்ட விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

நாடு திடீரென மூடப்பட்டதன் காரணமாக கொவிட் தொற்றுநோய்களின் போது நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், குறைந்த வளங்களைக் கொண்ட ஏழை நாட்டை மூடுவதற்கு எடுத்த தீர்மானம் தேசிய வருமானத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதாக மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு வங்குரோத்து நிலையில் உள்ளதாக கூறப்படுவதை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: