இலங்கை மீதான பயணத் தடையை நீக்கியது மலேசியா!

கொவிட் பரவல் காரணமாக மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை உடன் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, மலேசிய குடியுரிமை அல்லது நீண்டகால விசாவை கொண்டுள்ளவர்கள், வணிகர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய குடிவரவு பணிப்பாளர் நாயகம் கைருள் டைமி தாவூத் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த அனுமதியின் கீழ் மலேசியாவுக்கு பயணிப்பவர்கள், பூரண தடுப்பூசிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், அந்த நாட்டுக்கு வந்தபின்னர், கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எந்தப் புதிய திரிபுகளும் பரவாமல் தடுப்பதற்காக, மலேசிய சுகாதார அமைச்சினால், வெளிநாடுகளிலிருந்த வருகை தரும் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மலேசியாவில் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|