இலங்கை – நேபாள அரச தலைவர்கள் சந்திப்பு – அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடல்!

Wednesday, September 20th, 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள இலங்கை – நேபாள கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு, அதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாக அமையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்தில் வலுவாக முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்த நேபாள பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் நேபாள மக்களுக்கு இடையில் சமய மற்றும் கலாசார ரீதியில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கு இது ஒரு சிறந்த காரணியாக அமையும் என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கைகளை இதன்போது, ஜனாதிபதி விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தபடவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றக் குழு மீளாய்வின் போதும் இந்த சட்டமூலம் தொடர்பில் மேலதிக திருத்தங்களை மேற்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: