இலங்கை – தாய்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் – இருநாட்டு அரசதலைவர்கள் இணக்கம்!

Saturday, July 14th, 2018

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுஇலங்கை வந்தடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்த தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுக்கள் முழங்க மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின. இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

சட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

Related posts: