இலங்கை சிறார்கள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளை கற்கவேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை!

Thursday, August 17th, 2023

மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் இலங்கை சிறார்கள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளை கற்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உலகப் பொருளாதாரம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளது.செயற்கை நுண்ணறிவு, ரோபா தொழிநுட்பம், வலு சக்தி சேமிப்பு, பிளொக் செயின் தொழில்நுட்பம், ஜெனொம் விஞ்ஞானம் ஆகிய சில துறைகள் மாத்திரம் உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது.

இந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகப் பொருளாதாரத்தில் 300 முதல் 700 டிரில்லியன் டொலர் வரையிலான பாரிய பெறுமதி இணையும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்த பொருளாதாரத்துடன் தான் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.

1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் ஆடைத் தொழிலுக்கு நாம் தயாராக இருந்ததைப் போலவே, இப்போது அந்தத் தொழில்நுட்பங்களை ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கு தயாராவதற்கு முதலில் இந்த நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும். இந்தப் பாடங்களுக்கு உகந்த வகையிலான பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும்.

மேலும், சீன மொழி, ஹிந்தி மொழி, ஆங்கில மொழி ஆகிய மொழி அறிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அப்படியானால், இந்த விடயத்தில் அறிவைப் பெறக்கூடிய பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவ நாம் திட்டமிட்டுள்ளோம்.

பணம் காரணமாக கல்வியை நிறுத்தாமல், மாணவர்களுக்கு அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு, வெளிநாடுகளைப் போல் மானிய முறையில் கடன் வழங்கும் திட்டத்தை நாம் செயற்படுத்துவோம்” என தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: