இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வு -இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் விசேட கவனம்!

Sunday, May 8th, 2022

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினரை இன்று சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

நாட்டின் தற்போதைய நிலை மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல தரப்பினரதும் யோசனைகளும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மத்தியஸ்த்தம் வகிக்குமாயின், அரசாங்கத்துடன் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் கலந்துரையாட தயாராகவுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் தற்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியலமைப்பில் எவ்வாறு திருத்தங்களை மேற்கொள்வது என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதனூடாக ஜனாதிபதியின் பதவியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக, மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: