இலங்கை – உக்ரேனிய இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் ஆராய்வு!

Friday, September 17th, 2021

இலங்கையின் சுற்றுலா துறையின் ஊக்குவிப்புப் பிரசாரத்தில் பங்கேற்பதற்காகவும், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும், பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய உக்ரைனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்..

இந்த விஜயத்தின் போது, ஊடக மற்றும் சுற்றுப்பயண இயக்குனர் வலையமைப்பு அமர்வொன்றில் இராஜாங்க  அமைச்சர் பங்கேற்றிருந்தார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, உக்ரைனில் உள்ள முன்னணி ஊடகங்கள் மற்றும் பயண அமைப்புக்களின் பிரதிநிதிகளை ஈர்த்ததுடன், இலங்கையின் சுற்றுலா இடங்களை, குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் காட்சித் தலங்களையும், உக்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க வேண்டிய பயண அனுபவங்களையும் முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பை வழங்கியது.

உக்ரைனின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் டிம்ட்ரோ சேனிக், பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும்  விவசாயப் பிரதி அமைச்சர் தாராஸ் கச்ச்கா மற்றும் உக்ரைன் வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் தலைவர் ஜென்னடி சைகிகோவ் மற்றும் சபை உறுப்பினர்களைச் சந்தித்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, குறிப்பாக விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: