இலங்கையை மீட்சி பாதைக்கு கொண்டுவர மூன்று பெண்கள் பெரும்பங்காற்றினர் – ஆசிய பிராந்தியத்திய பெண்களின் உரிமைகளை முன்னெடுப்பதில் இலங்கை தலைமையாக செயற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023

இலங்கையின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளின்போது தேவையான வெளிநாட்டு உதவிகளை பெறுவதில் சர்வதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் முக்கிய அங்கங்களாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில் – இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெல்லன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஆகியோர், நாட்டுக்கு தேவையான நேரத்தில் நிதி மற்றும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதில் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார்.

2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் மீட்சிக்கான பாதைக்கு பலர் உதவியிருந்தாலும், அதில் இந்த மூன்று பெண்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை ஒப்புக்கொண்டார்.

அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக விபரித்த ரணில் விக்கிரமசிங்க, நாடு வங்குரோத்து நிலையை அறிவித்த பிறகு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

இது ஒரு துணிச்சலான நடவடிக்கை என்று கூறிய அவர், அந்த நேரத்தில் கடனைப் பெறாவிட்டால் நம்நாடு எதிர்கொள்ள வேண்டிய விளைவுகள் சொல்லில் அடங்காது என்பதை வலியுறுத்தினார்.

அத்துடன், பல முக்கிய நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த நாடுகளில், முக்கியமான நாடு அமெரிக்கா. இதற்கு அந்நாட்டின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தலைமை தாங்கினார். அவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை மீது காட்டிய தனிப்பட்ட அர்ப்பணிப்பை ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் இது தொடர்பாக பெறப்பட வேண்டிய நிவாரணம் குறித்து மற்ற நாடுகள், உலக வங்கி மற்றும் பாரிஸ் கிளப் ஆகியவற்றுடன் தொடர்புடைய பேச்சுவார்த்தைகளை நடத்தியதற்காக அவருக்கு நன்றிகளை தெரிவித்தார்.

இந்த மூன்று பெண்களும் எங்களுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால், நாங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்போம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க திறைசேரி அனைத்தும் இன்று பெண்களின் கைகளில் உள்ளன. பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்த பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்கள் மற்றவர்களை விட முன்னணியில் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், ஆசிய பிராந்தியத்தினுள் பெண்களின் உரிமைகளை முன்னெடுப்பதில் இலங்கை தலைமையாக செயற்படும் என்றும் கூறினார்.

அனைத்து துறைகளிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலை அடைவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் மேலும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: