இலங்கையை உலகின் முக்கிய கப்பற் போக்குவரத்து கேந்திர நிலையமாக முன்னேற்ற முடியும் – ஜனாதிபதி

Wednesday, September 16th, 2020

இலங்கையின் அமைவிடத்தை பயன்படுத்தி உலகின் முக்கிய கப்பற் போக்குவரத்து கேந்திர நிலையமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலகின் வளர்ச்சியடைந்த துறைமுகங்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் துறைமுக வசதிகளை அபிவிருத்தி செய்து அபிவிருத்தி இலக்குகளை துரிதமாக அடைந்துகொள்ள முடியுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

24 ஆயிரம் கொள்கலன்களை கொண்டு செல்லக்கூடிய உலகின் பாரிய கப்பல்களை ஈர்க்கக் கூடிய வகையில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் தேவையை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

களஞ்சிய வசதிகள் கொள்கலன் முனையங்கள் துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் இயந்திரப்படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை அண்மித்து பயணம் செய்யும் சர்வதேச கப்பல்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய வகையில் துறைமுக முறைமையை மேம்படுத்தி கொழும்பு, காலி, திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டும். மீள் கப்பலேற்றல் நடவடிக்கைகளை கையாள்வதற்கான வசதிகள், களஞ்சிய வசதிகள் மற்றும் வழங்கல் வசதிகளை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: