நாட்டுக்கு பொருத்தமான அதிகாரப்பகிர்வே நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர்

Wednesday, March 30th, 2016

உலக நாடுகளில் பல்வேறு விதமான அதிகார பகிர்வுகள் நடைமுறையில் இருந்தாலும் எமது நாட்டக்கு பொருத்தமான அதிகார பகிர்வே இங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு தொடர்பான செயலமர்வு நேற்று(29) பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர்,

எமது மக்களும் எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியும் என எதிர்பார்க்கின்றேன். இதற்கு முன்னர் நாம் கொண்டு வந்த அரசியலமைப்பை விட வித்தியாசமானதாக இம்முறை அரசியலமைப்பு அமையும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதான இரு கட்சிகளும் இணைந்து தற்போது அரசாங்கம் அமைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த மக்கள் வழங்கிய ஆணையே அது.

மக்களின் எதிர்பார்ப்பையும் உரிமைகளையும் நிறைவேற்றுகின்ற அரசியலமைப்பே புதிய அரசியலமைப்பாகும். அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்புச் சபையை உருவாக்கவுள்ளோம். இதில் ஐ.தே.க. அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என இரண்டு சட்டமூலம் கிடையாது. எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதி நாம் அதற்கான குழுவை நியமிக்கவுள்ளோம்.

இந்த குழு புதிய அரசியலமைப்பின் விடயங்கள் குறித்து தீர்மானிக்கும். மே மாதத்தின் முதல் வாரத்தில் மேற்படி குழு தமது அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளது. அடுத்து அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. நாட்டுக்குப் பாதிப்பில்லாமல் அதிகாரங்களைப் பகிர்வது முக்கியமாகும். அதிகாரத்தைப் பகிர்வது மற்றும் விஸ்தரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படும். பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தை அரசாங்கமாக்கும் செயற்பாடு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

அமெரிக்கன் முறையோ அல்லது வேறு முறையோ இல்லாது பௌத்த கோட்பாட்டிற்கிணங்க அமைவது அனைவருக்கும் பொருத்தமானதாகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Related posts: