இலங்கையும் அல்ஜீரியாவும் முதலாவது இருதரப்பு ஆலோசனை – சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தல் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அறிவிப்பு!

Sunday, October 17th, 2021

அல்ஜீரிய மக்கள் ஜனநாயக குடியரசுடனான முதன்முதலான இருதரப்பு மெய்நிகர் ஆலோசனைகளை இலங்கை நடத்தியது. இக்கலந்துரையாடல்களின்போது, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தல் குறித்து கவனம்’ செலுத்தப்பட்டது.

ஆபிரிக்க பிராந்தியத்துடனான உறவுகளை மேலும் விரிவாக்குதல் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கிணங்க, வட ஆபிரிக்காவில் முன்னணி பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அல்ஜீரியாவுடனான நெருங்கிய ஈடுபாடு எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடத்தின் மொத்த வர்த்தகம் 5.39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதாக இருதரப்பினரும் குறித்துக்கொண்டனர். அல்ஜீரியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 0.63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமேயானாலும், அல்ஜீரியாவிலிருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 4.76 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவிருந்தது.

பெற்றோலியம் மற்றும் எல்  பி எரிவாயுவின் பிரதான ஏற்றுமதியாளர் என்ற வகையில், இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் பெரும்பாலும் எரிசக்தி துறையுடனேயே இருந்து வந்திருக்கிறது.

ஆனபோதிலும், குறிப்பாக தேயிலை, வாசனைப்பொருட்கள், தெங்கு உற்பத்திகள் மற்றும் ஆடைகள் ஏற்றுமதிகளை மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறு பற்றி ஆராயப்பட்டது. இரு நாடுகளதும் வர்த்தக சம்மேளனங்களுக்கு இடையிலான ஒரு மெய்நிகர் கூட்டமானது, இச்செயன்முறையை முன்னோக்கிக்கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த இருதரப்பினரும், அடுத்த வருடம் இருநாடுகளுக்கும் இடையிலான 50 வருட இராஜதந்திர உறவுகளை உரிய வகையில் கொண்டாடுவதற்கு உடன்பட்டனர்.

2022 இல் அடுத்த அணிசேரா இயக்கத்தின் (NAM) உச்சிமாநாட்டினை தாம் நடத்தவுள்ளதாக அல்ஜீரியா அறிவித்துள்ளதுடன், இரு நாடுகளுமே அணிசேரா இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களாக இருப்பதும் நினைவுகூரப்பட்டது.  அத்துடன் பல்தரப்பு மட்டத்தில் தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்ற  இருநாடுகளும் உடன்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: