இலங்கையில் 8000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Tuesday, October 27th, 2020

நாட்டில் கொரோனா தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றையதினம் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 499 பேர் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். 42 பேர் தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

கடந்த 23 ஆம் திகதி 866 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியானதுடன், கடந்த 6ஆம் திகதி 739 பேருக்கு தொற்றுறுதியானது.

இந்த நிலையில், 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், நாட்டில் இதுவரையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 413 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த எண்ணிக்கையில், திவுலப்பிட்டி மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் மாத்திரம் 4 ஆயிரத்து 939 பேர் அடங்குகின்றனர்.

இந்நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்த கொரோனா பரவல் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 116 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது.

இதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 130 பேர் இன்று குணமடைந்தனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா நோயுடன் அடையாளம் காணப்படுகின்றவரின் முதல்தொடர்பாளர் இனிவரும் காலங்களில் வைத்தியசாலைகளில் அல்லது விசேட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளர்களின் முதலாவது தொடர்பு நபர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: